சுயலாப அரசியல்வாதிகளாலேயே எமது மக்கள் அளவிடமுடியாத துன்ப துயரங்களை சந்திக்க வேண்டி நேர்ந்ததாகவும் இதேபோன்று எதிர்காலங்களிலும் சுயலாப அரசியலுக்கு இடம்கொடுக்க வேண்டாமென்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
சாவகச்சேரி பிரதான வீதியில் அமைந்துள்ள தனியாருக்குச் சொந்தமான எரிபொருள் நிலையம் உள்ளிட்ட தொழில் ஸ்தாபனத்தை இன்றைய தினம் (9) பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த தொழில் ஸ்தாபனத்தின் உரிமையாளரான சிவராசா அவர்களது முயற்சி வரவேற்கத்தக்கதும் பாராட்டத்தக்கதுமாகும். ஒரே குடையின் கீழ் மக்கள் வௌ;வேறு சேவைகளை பெற்றுக்; கொள்ளும் பொருட்டு அமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்தாபனத்தின் ஊடாக இப்பகுதி மக்கள் மட்டுமல்லாது இந்த பிரதான வீதியால் பயணிக்கும் மக்களும் முழுமையான பலன்களை பெற்றுக் கொள்ள முடியுமென்பதுடன், பலருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கவுள்ளது.
முன்னர் ஒருகால கட்டத்தில் எந்த நேரத்திலும் என்னவும் நடக்கலாம் என்ற நிலை இருந்து வந்தபோதிலும் இன்று அந்த நிலை முற்றாக மாற்றம் பெற்று ஒரு அமைதியான சூழல் பிறந்துள்ளது.
இன்றுள்ள அமைதிச் சூழலால்தான் சிவா அவர்களால் இவ்வாறான செயற்திட்டத்தை முன்னெடுக்க முடிந்துள்ளது. எனவே எதிர்காலத்தில் மக்கள் இன்றுள்ள அமைதிச் சூழ்நிலையை பாதுகாத்து அதனூடாக முன்னேற்றத்தை காண வேண்டும்.
இந்நிலையில் மக்கள் உசுப்பேற்றலுக்கும் நடைமுறைச்சாத்தியமில்லாத பேச்சுக்களுக்கும் இடம் கொடுக்காது சரியான வழிதிசைநோக்கி செல்ல வேண்டும். நாம் மக்களின் துன்ப, துயர நேரங்களில் அவர்களுடன் ஒன்றாக இருந்துள்ள அதேவேளை, இன்றும் மக்களது மேம்பாட்டுக்காகவும் இப்பகுதியின் அபிவிருத்திக்காகவும் தொடர்ந்தும் மக்களுடனேயே வாழ்ந்து வருகின்றோம்.
மக்கள் சுதந்திரமாக வெளிப்படையாக செயற்பட வேண்டுமென்பதற்காகவே நாம் வெளிப்பபடைத்தன்மையுடன் செயற்பட்டு வருகின்றோம்.
தமிழ்த் தலைமைகளின் தவறான வழிநடத்தல்களினாலேயே கடந்த காலங்களில் எமது மக்கள் பல்வேறுபட்ட துன்பதுயரங்களை சந்திக்க வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறானதொரு சூழ்நிலையின் போதுதான் குடாநாட்டு மக்கள் சுயலாப அரசியலுக்காக வலுக்கட்டாயமாக குடாநாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார்கள்.
இவற்றை உணர்ந்து கொண்டு எமது மக்கள் எதிர்காலத்தில் சுயலாப அரசியலுக்கு இடம் கொடுக்க வேண்டாமென்றும் அமைச்சர் அவர்கள் இதன்போது கேட்டுக் கொண்டார்.
எரிபொருள் நிலையம் உள்ளிட்ட தொழில் ஸ்தாபனம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் திறந்து வைக்கப்பட்டதுடன், அதன் செயற்திட்டங்களையும் அமைச்சர் அவர்கள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இத்தொழில் ஸ்தாபனத்தில் எரிபொருள் நிரப்பு நிலையம், வாகனசுத்திகரிப்பு நிலையம், சுப்பமார்க்கற் மற்றும் ஹொட்டல் ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன.
முன்னதாக அமைச்சர் உள்ளிட்ட அதிதிகள் மங்கள வாத்தியம் சகிதம் நிகழ்விடத்திற்கு அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து சர்வமத குருமார்களின் ஆசியுரைகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட சமயக் குருமார்களுக்கும் நினைவுப்பரிசில்களை உரிமையாளர் சிவராசா வழங்கி வைத்த அதேவேளை, அதிதிகளால் சமாதானப்புறாக்களும் பறக்கவிடப்பட்டது.
இதில் யாழ்.இந்திய துணைத் தூதரகத்தின் பிரதிநிதி சுரேஸ்மேனன் மற்றும் லங்கா ஐ.ஒ.சி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சுபேஸ்தக்வேல் ஆகியோர் உடனிருந்தனர்.

