புலம்பெயர்ந்து வாழும் புலிகளின் ஆதரவாளர்கள் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களை நோக்கி கேட்கப்பட்ட பல கேள்விகளுடன் வந்த மின்னஞ்சல் ஒன்றுக்கு மனந்திறந்து அமைச்சர் அவர்கள் வழங்கிய பதில்கள்.
கேள்வி1:
புலம்பெயர் மண்ணில் சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேலாக வாழ்பவர்களைக் கொண்ட முன்னாள் புலிகளின் ஆதரவாளர்களாகிய நாம் பல செயற்பாடுகளில் தோளோடு தோள் நின்று செயற்பட்டவர்களும் அடங்குகின்றனர். எமக்கிடையே நடைபெற்றுக்கொண்டிருக்கும் அதிகார வெறி, சூழ்ச்சிகள் என்பவற்றில் சிக்காது தூரத்தில் நின்று நிலைமைகளை அவதானித்துக் கொண்டு எமக்கிடையே ஒற்றுமை ஏற்பட எந்த சந்தர்ப்பங்களும் கிட்டாத நிலையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்யவும் எமது உறவுகள் எமது மண்ணில் தமது முதுமைக்காலத்தில் தனிமையில் வாழ்வதைக் கருத்திற்கொண்டும் தாயகம் திரும்பும் எமது ஆவல் மேலோங்கியுள்ளது. இந்த நிலைமைகளைக் கருத்திற் கொண்டு நாம் தாயகம் திரும்பும்போது அரச படைகளால் எமக்கு உயிராபத்துக்கள் நேர்ந்துவிடுமோ என்ற அச்சமும் சந்தேகமும் உள்ளது.இவ்வாறான சந்தர்ப்பத்தில் நீங்கள் எவ்வகையில் எமக்கு உதவலாம்?
பதில்: புலம்பெயர்ந்துள்ள எமது மக்களதும் அவர்கள் தங்கள் உறவுகளாக இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கும் உங்கள் ஏக்கங்கள் எவ்வாறானவை என்பதை அவ்வாறானதொரு சூழ்நிலையில் வாழ்ந்து வலிகள் சுமந்தவனாக என்னால் நன்கு உணர முடிகின்றது.
பாசத்தோடு உங்களை கட்டியணைத்த உங்கள் தாய், தந்தையர் தமது முதுமைக்காலத்தில் எழுந்து நடக்க,கைகொடுத்து காப்பாற்ற பிள்ளைகள் இல்லை என்ற ஏக்கத்தில்! நீங்களோ யுத்தம் நிறைவுபெற்ற பின்னர் மற்றவர்களைப் போல தாயகத்திற்கு வந்து செல்ல முடியாது தவிக்கும் மனக்குமுறல்களை நான் நன்கு உணர்வேன்.
தாயகத்திலுள்ள எமது மக்களின் விருப்பங்களுக்காக மட்டுமல்ல புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழ்பேசும் மக்களின் நியாயமான விருப்பங்களையும் நிறைவேற்றவே நாம் உழைத்துக் கொண்டு இருப்பவர்கள். மறுபுறத்தில் தமது கூட்டத்தினரது நலன்களுக்காகவும் தமது குடும்ப நலன்களுக்காகவும் ஒட்டு மொத்த இனத்தின் நலன்களை தாரைவார்க்க போலியாக உணர்ச்சி பொங்க பேசும் கூட்டத்தினர், எமது மக்களை அவர்களின் பேச்சுக்களில் கட்டுண்டு அடிமைகளாக்கத் துடித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.
எமது அனைத்துச் செயற்பாடுகளும் வெளிப்படையானவை.ஒழிவு மறைவான அரசியல் கலாச்சாரத்தை ஒட்டுமொத்தமாக வெறுப்பவர்கள் நாம்.
"தமிழீழம் அமையும், மூன்றாம் கட்டப் போர் தொடங்கும் என்று குடுகுடுப்பைக்காரனின் ஆரூடம் சொல்லும் வார்த்தைகளில் மயங்கிவிடாது உணர்வுபூர்வமானதாகவும் நடைமுறைச்சாத்தியமான வழிவகைளில் உங்கள் பாதையை செப்பனிடுங்கள். உங்களது தாயகம் நோக்கிய வருகையானது எந்தவொரு வன்முறை நோக்கமுமற்ற இதயசுத்தியுடனான வருகையாக இருக்குமாயின் ஜனாதிபதி அவர்களிடம் கலந்துரையாடி உங்களது வருகையை எம்மால் உறுதிப்படுத்த முடியும். உங்களது தாயக வருகை தொடர்பான விபரங்களை எனக்கோ அல்லது புலம்பெயர் நாடுகளில் செயற்படும் எமது பிரதிநிதிகளிடமோ நீங்கள் கையளிக்கலாம்.
கேள்வி 2:
பொருளாதார ரீதியாக எமது முதலீடுகளை எமது தாயகத்தில் வைப்புச் செய்ய நாம் விருப்பமாக உள்ளோம். எமது இந்த முதலீடுகள் சிதைந்து போன எம் மண்ணின் பொருளாதார சீரழிவுகளை சீர்ப்படுத்தி தூக்கிநிறுத்தி எமது மக்களுக்கு உதவுவதில் ஆர்வமாகவுள்ளோம். இவை தொடர்பான வழிவகைகளில் நீங்கள் எவ்வாறு உதவமுடியும்?
பதில்: நிச்சயமாக உதவமுடியும். வரவேற்கத்தக்க ஆக்கபூர்வமான முயற்சி.
ஓர் இனத்தின் முதுகெலும்பாகவே பொருளாதாரம் அமைகின்றது. அப்போது தான் ஏனைய விடயங்களில் அரசியல், சமூகம், கலை,கலாசாரம், விஞ்ஞானம், விளையாட்டுத்துறை என பல பரிமாணங்களில் பரிணமிக்க முடியும். எமது மண்ணில் இவ்வாறான செயற்பாடுகளுக்கு பக்கச்சார்பற்ற சுதந்திரமான நடவடிக்கைகளை உறுதிப்படுத்துவது எமது கொள்கைகளில் ஒன்று. எனவே நீங்கள் தாமதிக்காது உங்கள் செயற்பாடுகளை முன்னெடுக்கலாம். அழிந்து போன எமது தேசத்தின் பொருளாதாரக் கட்டுமானங்களை தூக்கி நிறுத்துவதில் புலம்பெயர் மக்களாகிய உங்களது பங்களிப்புக்கள் கணிசமானவையாக இருக்க வேண்டும். உங்களது முயற்சிகளுக்கான ஆதரவுக் கரங்களை நாம் இறுகப் பற்றிக் கொள்கின்றோம். உங்கள் அனைவரையும் வரவேற்பது எமது கடமைகளில் ஒன்று. உங்கள் அனைவருக்கும் என்னுடையதும் எனது கட்சியினரதும் தார்மீக ஆதரவு எப்போதும் இருக்கும் என்பதை உறுதிப்படுத்துகின்றேன்.
கேள்வி3:
புலம்பெயர்ந்து வாழும் நாம் இலங்கையில் பிறந்திருந்தாலும் புலம்பெயர் நாடுகளின் பிரஜாவுரிமை பெற்றவர்களாகவே வாழ்ந்து வருகின்றோம்.இவ்வாறான நிலைமைகளில் நாம் இரட்டைப் பிரஜாவுரிமைக்கு விடயத்தில் எமக்கு பாரபட்சம் ஏதேனும் காட்டப்படுமா?
பதில்: இந்த விடயத்தில் பல்வேறுபட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருந்து வந்தன. புலம்பெயர்ந்து வாழும் தமிழ்பேசும் உறவுகள் எம்மோடு தொடர்பு கொண்டு பேசியதையடுத்தே நான் அரசாங்கத்துடன் இதுகுறித்து பேசியிருக்கின்றேன். இரட்டை பிரஜாவுரிமை வழங்குவதற்கான இணக்கப்பாட்டிற்கும் அரசாங்கம் முன்வந்துள்ளது. இதேவேளை இரட்டை பிரஜாவுரிமை நடைமுறைக்கு வந்துள்ளது. இதுகுறித்து ஏதாவது நடைமுறை சிக்கல்கள் இருந்தால் எம்முடன் தொடர்பு கொள்ளலாம்.
கேள்வி4:
எமது பரம்பரைச் சொத்துக்கள் (எமக்குச் சொந்தமான நிலபுலன்கள்) திட்டமிட்ட வகையில் சூழ்ச்சிகளாலும் வேறு அடிப்படைகளிலும் மாற்றப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி இராணுவத்தினரது பிரசன்னமும் இந்த நிலபுலன்களில் உள்ளது. இது தொடர்பான உங்கள் நிலைப்பாடு என்ன?
பதில்: உணர்ச்சி பொங்க பேசி எமது மக்களை தவறான திசை நோக்கி தள்ளிவிடுவதில் எமக்கு உடன்பாடு கிடையாது. எமக்குக் கிடைத்த சந்தர்ப்பங்களை சாதகமாகப் பயன்படுத்தி பல நிலபுலன்களை அண்மைக்காலத்தில் எமது மக்களுக்கு பெற்றுக்கொடுத்துள்ளோம். இவைகள் ஆதாரத்துடன் உள்ளன. மாகாண சபை அதிகாரம் எமக்கு கிடைக்கும் பட்சத்தில் அந்த அரசியல் அதிகாரபலமும் எமது இணக்க அரசியல் வழிமுறையும் இணையும் போது எஞ்சியுள்ள மக்களின் நிலங்களையும் நாம் விரைவாக மீட்டுக் கொடுக்க முடியும். தேர்தல் காலத்தில் மட்டும் வந்துபோகும் புற்றீசல்கள் அல்ல நாங்கள், மாறாக இந்த மண்ணின் அனைத்து வளர்ச்சிகளிலும் அர்ப்பணிப்புடன் கால்பதித்து நடந்து வந்த வரலாற்றைக் கொண்டவர்கள் நாங்கள். எந்த விவகாரத்தையும் நடைமுறைச்சாத்தியமான வழிகளில் அணுகி தீர்வு காணும் வழிமுறைகளில் வெற்றிப் பாதையைக் நோக்கி பயணித்துக் கொண்டிருப்பவர்கள் நாங்கள். பிரச்சினைகள் அனைத்துக்கும் சிறந்த நிதானமான சிந்தனைகள் வெற்றியைச் சம்பாதித்துத் தரும் என்ற எமது நம்பிக்கை என்றும் தோற்றுப்போகாது. பொறுத்திருங்கள் நல்லதே நடக்கும்.
நீங்கள் பல கேள்விகளை எனக்கு அனுப்பி வைத்துள்ளீர்கள். முக்கியமான கேள்விகளுக்கு எனது பதிலை அளித்துள்ளேன். மீதமுள்ள கேள்விகளுக்கு பகுதி பகுதியாக பதில் அளிப்பேன்.
நன்றிகள்


