சிறுபான்மை கட்சிகளின் பேரம்பேசும் சக்தி இனியும் சாத்தியமாகுமா?
சமூக அபிவிருத்தியில் அரசியல் பிரதிநிதித்துவம் மிகவும் இன்றியமையாததாகும் .
அர்த்தமுள்ள அரசியல் பிரதிநிதித்துவத்தின் ஊடாக பல்வேறு சாதக விளைவுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் . இந்த வகையில் சிறுபான்மைக்கட்சிகள் கடந்த காலங்களில் அரசியல் பிரதிநிதித்துவத்தின் ஊடாக பல விடயங்களை சாதித்துக்கொண்டுள்ளன . பேரம்பேசும் சக்தி விடயங்களை சாதித்துக்கொள்ள உந்து சக்தியாக அமைந்தது . எனினும் , அண்மைக்காலமாக சிறுபான்மை கட்சிகளின் பேரம் பேசும் சக்தி வலுவிழக்கும் அபாயத்தினை எதிர்கொண்டுள்ளது என்பதனையும் மறுப்பதற்கில்லை . இந்நிலையில் சிறுபான்மை கட்சிகள் பேரம் பேசும் சக்தியினை மீளவும் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியம் குறித்து புத்தி ஜீவிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும் .
உரிமைகளை பெற்றுக்கொள்ள அழுத்தம் கொடுக்கும் பொருட்டும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொள்ளும் பொருட்டும் மேலும் பல காரணங்களுக்காகவும் அமைப்புகள் , தொழிற்சங்கங்கள் , அரசியல் கட்சிகள் என்பன ஆரம்பிக்கப்படுகின்றன . மக்களிடையே பல்துறைகளில் அபிவிருத்தியினை ஏற்படுத்துவதும் இவற்றின் நோக்கமாக உள்ளது . உதாரணமாக தொழிலாளர்களது பாதுகாப்பு , உரிமை என்பவற்றைப் பேணி அவர்களை சுதந்திரமாக வாழ வைப்பதற்காக தொழிற்சங்கங்கள் ஆரம்பிக்கப்பட்டன . தொழில் பிரச்சினைகளுக்கு தீர்வு , தொழில் உரிமைகளையும் சலுகைகளையும் பெற்றுக்கொடுத்தல் , சுய வேலைவாய்ப்பு திட்ட அபிவிருத்தி , சமூக பொருளாதார அபிவிருத்தி உள்ளிட்ட மேலும் பல இலக்குகளை மையமாக வைத்து தொழிற்சங்கங்கள் செயற்படுகின்றன .
இதுபோன்ற அமைப்புகளும் சிறுபான்மைக் கட்சிகளும் பல்வேறு இலக்குகளை நோக்கி தமது பயணத்தை தொடர்கின்றன .
மக்களுக்கான உரிமைகளை பெற்றுக் கொடுப்பதிலும் பல வழிமுறைகள் கையாளப்படுகின்றன . சுமுகமான பேச்சுவார்த்தைகள் , சட்ட ரீதியிலான முயற்சிகள் , வேலை நிறுத்தப்போராட்டங்கள் , மெதுவாக பணி புரியும் போராட்டங்கள் , பேரம் பேசுதல் போன்ற பலவற்றை நாம் இதன்போது குறிப்பிட்டுக்கூற முடியும் . இந்நிலையில் சிறுபான்மைக் கட்சிகள் ஆட்சியில் உள்ள அரசிடம் பேரம் பேசுவதனை மையமாக வைத்து உரிமைகளையும் சலுகைகளையும் பல்துறைசார் அபிவிருத்திகளையும் பெற்றுக் கொடுத்துள்ளமை யாவரும் அறிந்த விடயமாகும் . எனினும் , அண்மைக்கால நிலைமைகள் தலைகீழாகியுள்ளன . சிறுபான்மைக் கட்சிகளின் கோஷங்களும் கோரிக்கைகளும் வலுவிழக்கும் போக்கு சம காலத்தில் காணப்படுகின்றது .
பேரினவாத கட்சிகளின் விஷமப் பிரசாரங்கள் சிறுபான்மை கட்சிகளுக்கு இடையிலான முரண்பாட்டு சூழ்நிலைகள் , பிரித்தாளும் கைங்கரியங்கள் , சுயநலவாத அரசியல் போக்குகள் , சிறுபான்மை அரசியல்வாதிகள் அற்ப சொற்ப சலுகைகளுக்காக விலை போகும் நிலைமைகள் உள்ளிட்ட பல காரணிகள் சிறுபான்மை கட்சிகளை முகவரி இல்லாத நிலைமைக்கு மாற்றியுள்ளது . பல வேளைகளில் சிறுபான்மை கட்சிகள் தமக்குத்தாமே குழிதோண்டிக் கொண்ட நிலைமைகள் இலங்கையின் அரசியல் வரலாற்றில் காணப்படுகின்றன . " சுட்டும் விரலால் எதிரியைக் காட்டி குற்றம் கூறுகையில் மற்றும் மூன்று விரல்களும் உந்தன் மார்பினைக் காட்டுதடா " என்ற பழைய பாடல் ஒன்றின் வரிகளை அடிக்கடி நினைத்துப்பார்க்க வேண்டியுள்ளது .
சிறுபான்மை கட்சிகளின் சமகாலப் போக்குகள் அபாயகரமான சூழ்நிலையை தோற்றுவித்து விடுமோ என்ற இயல்பான அச்சம் மேலெழுந்து வருகின்ற நிலையில் சிறுபான்மைக் கட்சிகளின் எதிர்கால சாத்தியப்பாடுகள் மற்றும் பேரம் பேசும் நிலைமைகள் தொடர்பாக பேராதனை பல்கலைக்கழக பொருளியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ் . விஜயசந்திரனிடம் கருத்து வினவினேன் . இதன்போது விஜயசந்திரன் கருத்துத் தெரிவிக்கையில் ;
வடக்கு , கிழக்கு பகுதிகளில் சிறுபான்மைக் கட்சிகளின் கை ஓங்கியுள்ளது . பேரம்பேசும் நிலைமைகளும் காணப்படுகின்றன . எனினும் வடக்கு , கிழக்கிற்கு வெளியே சிறுபான்மைக் கட்சிகள் பலவீனமடைந்துள்ளன என்றே சொல்லத்தோன்றுகின்றது . இதன் காரணமாக இப்பகுதிகளில் பேரம்பேசும் சக்தியும் கேள்விக்குறியாகியுள்ளது . இலங்கை அரசு யுத்தத்தில் வெற்றி பெறுவதற்கு முன்னதாக தென்பகுதி பெரும்பான்மை மக்களின் வாக்குகள் இரண்டு கூறுகளாக பிரிந்திருந்தன . எனினும் , யுத்த வெற்றியின் பின்னர் தென்பகுதி பெரும்பான்மை சகோதரர்களின் வாக்குகள் ஒருபக்கமாக சாய்ந்துள்ளன . அதாவது ஆட்சியில் உள்ள அரசின் பக்கமாக தென்பகுதி பெரும்பான்மை மக்களின் வாக்குகள் அதிகமாக திரும்பியுள்ளன . பாராளுமன்றத்தில் ஆட்சியிலுள்ள அரசாங்கத்தின் கை ஓங்கியுள்ளது . இந்நிலையில் சிறுபான்மை சக்திகள் தேர்தலின்போது வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாகவோ அல்லது தேர்தலின் பின்னர் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சக்தியாகவோ இல்லாது போயுள்ளன . இதேவேளை சிறுபான்மை கட்சிகள் தற்போது மூன்று , நான்கு பிரிவுகளாக பிரிந்து செயற்படுகின்றன .
வடக்கு மாகாணத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு ஆதிக்கம் செலுத்துகின்றது . இதேவேளை , சில சிறுபான்மைக் கட்சிகள் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கி வருகின்றன . இன்னும் சில சிறுபான்மை கட்சிகள் எதிர்க்கட்சிக்கு ஆதரவு வழங்கி வருகின்றன . இப்பிரிவு நிலைமைகளும் சிறுபான்மை கட்சிகளின் எதிர்காலத்தையும் பேரம் பேசும் சக்தியினையும் சிந்திக்க வைத்துள்ளது . எனவே , மாற்று வழிமுறை குறித்து சிந்திக்க வேண்டும் . மலையக சிறுபான்மை கட்சிகள் , முஸ்லிம் கட்சிகள் , வடக்கில் உள்ள கட்சிகள் , கொழும்பை மையமாகக் கொண்டுள்ள சிறுபான்மை கட்சிகள் அனைத்தும் கருத்து வேற்றுமைகளை மறந்து கைகோர்த்து ஓரணியில் நின்று குரல் கொடுப்பதன் ஊடாக அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரித்துக்கொள்ள முடியும் என்பதோடு பேரம் பேசும் சக்தியையும் மேம்படுத்திக் கொள்ளலாம் என்று விஜயச்சந்திரன் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் . ஒற்றுமையின் அவசியப்பாடு அவரது நிலைப்பாட்டில் ஓங்கி ஒலித்தது .
இதேவேளை , நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித்தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான பி . இராஜதுரை சிறுபான்மை கட்சிகளுக்கிடையே பிளவுகள் ஏற்பட்டிருக்கின்றது என்பதைக் காட்டிலும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது என்பதே சாலப்பொருத்தமுடையது என்று தெரிவிக்கின்றார் . இனவாதிகள் தனது காய் நகர்த்தல்களை திட்டமிட்டு மேற்கொண்டு வெற்றி கண்டு வருவதாகக் கூறும் ராஜதுரை மேலும் இவ்விடயம் குறித்து கூறுகையில் ,
சில சிறுபான்மைக் கட்சிகள் தற்போது செயலிழந்து காணப்படுகின்றன . இக்கட்சிகளின் இயலாமை , வலுவிழந்த போக்குகள் என்பன காரணமாக மக்கள் அதிருப்தியுடன் வெளியேறுகின்றனர் . சந்தாவுக்காக மாரடிக்கும் தொழிற்சங்கங்களால் சாதக விளைவுகள் ஏற்படப்போவதில்லை . உண்மையில் மக்கள் நலனை முன்னிறுத்தி தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சிகளும் செயற்பட வேண்டும் . காளான்களைப் போன்று அதிகரித்து வரும் சிறுபான்மைக் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் மக்களிடையே விரிசல்களை ஏற்படுத்துவதோடு உரிமைகள் பறிபோவதற்கும் பேரம் பேசும் சக்தி மழுங்கடிப்பு செய்யப்படுவதற்கும் தோள் கொடுக்கின்றன . மலையக மக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு பல பிரச்சினைகள் காணப்படுகின்றன . எனினும் , கடந்த காலங்களில் மக்களின் தேவைகளை முன்னிறுத்தி உருப்படியான போராட்டங்களில் சிறுபான்மைக் கட்சிகளோ அல்லது தொழிற்சங்கங்களோ ஈடுபட்டதாகத் தெரியவில்லை . இது ஒரு வருந்தத்தக்க நிலைமையாக உள்ளது . சிறுபான்மை தலைமைகள் தனது நிலையினை ஸ்திரப்படுத்திக்கொள்ள பல இடங்களில் வாய்மூடி மெளனியாக இருப்பதனை அவதானிக்கக்கூடியதாக உள்ளது . இராவணன் ஆண்டாலென்ன இராமன் ஆண்டாலென்ன அல்லது கூடவந்த வேறு யார் ஆண்டாலும் நமக்கென்ன என்ற மனோநிலையில் பல சிறுபான்மை தலைமைகளின் செயற்பாடுகள் காணப்படுகின்றன .
ஆட்சியில் அமரப்போகும் அரசினை தீர்மானிக்கும் வல்லமை பெற்றிருந்த சிறுபான்மைக் கட்சிகள் இன்று சிறகிழந்துள்ளன . எவ்வாறெனினும் ஜனநாயக போராட்டத்தில் வடக்கிற்கு பேரம் பேசும் சக்தி இருக்கின்றது . வடமாகாண சபை பேரம் பேசும் சக்திக்கு உயிரூட்டி இருக்கின்றது என்று பாராளுமன்ற உறுப்பினர் எஸ் . இராஜதுரை மேலும் தெரிவித்தார் . ஒற்றுமையின் அவசியத்தை இராஜதுரையும் வலியுறுத்தத் தவறவில்லை .
இந்நிலையில் ஊவா மாகாண சபை உறுப்பினர் கே . வேலாயுதம் சிறுபான்மைக் கட்சிகளின் பேரம் பேசும் நிலைமைகள் குறித்து கருத்துத் தெரிவிக்கையில் ,
சிறுபான்மைக் கட்சிகளை புறந்தள்ளிவிட்டு அரசாங்கம் செயற்படுவதென்பது இயலாத காரியமாகும் . சிறுபான்மையினரின் உரிமைகள் மற்றும் தேவைகள் என்பன குறித்து அரசாங்கம் உரிய கவனம் செலுத்துதல் வேண்டும் . சிறுபான்மையினரின் பிரச்சினைகளை தேசிய மட்டத்தில் மட்டுமே பார்க்காது சர்வதேச ரீதியாகவும் நோக்குதல் வேண்டும் . இனவாத சண்டித்தனம் நீடிக்காது . இனவாதிகளால் சிறுபான்மையினருக்கு பாதிப்புகள் ஏற்படும்போது அது பாதக விளைவுகள் பலவற்றை தோற்றுவிக்கும் . நாட்டின் அபிவிருத்தியில்கூட சிறுபான்மையினரின் பங்களிப்பு , வகிபாகம் கணிசமாக உள்ளது . எனவே , சிறுபான்மையினரை புறந்தள்ளுவதால் நாட்டில் உரிய அபிவிருத்தியைக் காண முடியாது . சில இனவாத இயக்கங்களும் அவற்றின் வெற்றுக் கோஷங்களும் தற்காலிகமானவை ஆகும் . தனிச்சிங்கள சட்டத்தை ஆதரித்தவர்கள்கூட இன்று ஆங்கில மொழியின் அவசியப்பாட்டினை புரிந்து கொண்டுள்ளனர் . ஆயுபோவன் என்று சொல்பவர்களைக் காட்டிலும் குட்மோர்னிங் என்று சொல்பவர்களே இன்று அதிகமாக உள்ளனர் . காலமாற்றம் கருத்துக்கள் மற்றும் நிலைப்பாடுகளினதும் மாற்றத்தை கொண்டு வந்து சேர்க்கும் .
வடக்கில் ஓங்கி ஒலித்த குரல்கள் பேரம் பேசும் சக்திக்கு புதுமெருகூட்டியுள்ளன . எதையும் நாம் எதிராக பார்க்கக்கூடாது . யதார்த்த பூர்வமாக சிந்திக்கவும் செயலாற்றவும் வேண்டும் . ஒரு நாட்டில் அனைத்து இன மக்களின் பங்களிப்பும் அவசியமாகும் என்று வேலாயுதம் கருத்துத் தெரிவித்தார் .
எவ்வாறெனினும் சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பேணுவதில் சிறுபான்மைக் கட்சிகளின் பங்களிப்பு இன்றியமையாததாகும் . சிறுபான்மை கட்சிகளின் வலுவிழந்த தன்மையானது சிறுபான்மை மக்களின் உரிமைகளிலும் பாதக விளைவுகளை ஏற்படுத்தும் . எனவே , சிறுபான்மைக் கட்சிகள் புரிந்துணர்வின் அடிப்படையில் தன்னை இறுக்கமாக்கிக் கொள்ள வேண்டும் . பொதுவான விடயங்களில் ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு கருத்தை முன்வைக்காது பொருத்தப்பாடுடைய நடைமுறைசாத்தியமான பொதுக்கருத்துகளை முன்வைத்து அதனை அடைந்துகொள்ள உரிய அழுத்தத்தினைக் கொடுக்க வேண்டும் . சிறுபான்மை கட்சிகளின் குரலுக்கும் கோரிக்கைகளுக்கும் ஒரு மதிப்பை பெரும்பான்மை கட்சிகளிடம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் . இதைவிடுத்து தமது பிழையான செயற்பாடுகளால் இனவாதிகளுக்கு வழிவிட்டு சிறுபான்மைக் கட்சிகள் செல்லாக்காசாகுமானால் சிறுபான்மை மக்களும் நாட்டில் செல்லாக் காசாவதை தடுக்க முடியாது .


