உணவுப் பழக்க வழக்கங்களால் நோய்த்தாக்களைத் தவிர்க்கலாம் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
முறையான சுகாதார உணவுப் பழக்க வழக்கங்களை பின்பற்றுவதன் ஊடாகவே, ஏற்படக் கூடிய நோய்த் தாக்கங்களிலிருந்து எமது சமூகத்தை பாதுகாத்துக் கொள்ள முடியுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் பொது நூலகக் கேட்போர் கூடத்தில் யாழ்.மாநகர சபையால் ஒழுங்கு செய்யப்பட்ட உணவுப் பராமரிப்பும் பாதுகாப்பும் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கின் ஆரம்ப நிகழ்வில் இன்றைய தினம் (07) பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இவ்விழிப்புணர்வு கருத்தரங்கின் ஊடாக அனைவரும் சிறந்த பயன்களைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதுடன் முதற்கட்டமாக யாழ்.மாநகர எல்லைக்குள் தொடங்கப்படவுள்ள செயற்திட்டங்களை குடாநாடு மட்டுமல்லாது ஏனைய பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட வேண்டும்.
இதற்கமைவாக சகல உணவு வகைகளையும் கையாளும் நிலையங்களும் துறைசார்ந்தோரும் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறான ஒன்றிணைந்த முறையான சுகாதார உணவுப் பழக்க வழங்கங்களின் ஊடாகவே ஏற்படக் கூடிய தொற்று மற்றும் தொற்று அல்லாத நோய்த் தாக்கங்களிலிருந்து பாதுகாத்து, ஆரோக்கியம் உள்ள சமூகமாக எமது சமூகத்தை வளர்த்தெடுக்க முடியுமென்றும் சுட்டிக்காட்டினார்.
ஆரம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா உரையாற்றும் போது, யாழ்ப்பாணத்தின் கல்வி நிலையில் எப்படி முன்னேற்றம் கண்டோமோ அதேபோன்று உணவுப் பழக்க வழக்கங்களிலும் நாம் முன்னேற்றம் காண வேண்டும்.
நடந்து முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்று யாழ்ப்பாணத்தில் மட்டுமல்லாது வடமாகாணத்தில் கல்வியில் முன்னேற்றம் காண்பதற்கு வடக்கு மாகாண ஆளுநருடன் இணைந்து அரும்பாடுபட்டு உழைத்தவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.
இதில் உணவுப் பழக்க வழக்கங்கள் தொடர்பிலான விழிப்புணர்வு கருத்துரைகளை யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதி டாக்டர் பாலகுமாரன் மற்றும் டாக்டர் நித்தி கணகரட்னம் ஆகியோர் நிகழ்த்தினர்.
இவ் விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று முழுநாள் நிகழ்வாக நடைபெறவுள்ளது.
இதில் மாநகர சபை எல்லைக்குட்பட்ட உணவு வகைகளைக் கையாளும் நிலையங்களைச் சேர்ந்த உரிமையாளர்கள் உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் கலந்து கொண்டுள்ளனர்.


