அவர் மேலும் தெரிவிக்கையில்,
புலிகள் இயக்கம் ஆயுதவழியில் இறுதிவரை யுத்தம் நடத்தினார்கள். அந்த வழிமுறையை நாம் இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்குப் பின்னர் ஏற்றுக்கொள்ளவில்லை. அடைய முடியாத வழிமுறையாயினும் புலிகள் இயக்கம் ஆயுதவழிமுறை மூலம் விடுதலையை அடையலாம் என்ற இலக்கை கொண்டிருந்தனர்.
ஈ.பி.டி.பியினராகிய நாம் புலிகளின் வழிமுறையை நிராகரித்து 87 ற்குப் பின்னர் ஜனநாயக வழிமுறைக்கு வந்து எமது வழிமுறையில் எமது மக்களின் அரசியல் இலக்கை அடைவோம் என்ற உறுதியுடன் உழைத்து வருகின்றோம்.
ஆகவே, புலிகளும், நாங்களும் இருவேறு தரப்பாக இருந்தாலும் சரி பிழைகளுக்கு அப்பால் ஒரு இலக்கை நோக்கி செயற்பட்டிருக்கின்றோம். ஆனால், தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் இலக்கு என்ன?.. அவர்களுக்கு இலக்கு இருந்திருந்தால் 2000 ஆம் ஆண்டு சந்திரிக்கா குமாரணதுங்கா அவர்கள் கொண்டுவந்த தீர்வுத் திட்டத்தை ஏற்றிருப்பார்கள்.
ஆனாலும், ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி, சிகல உறுமய, போன்ற பேரினவாதக் கட்சிகள் நாடாளுமன்றத்தில் அந்த தீர்வு திட்டத்தை எரித்து தடைசெய்த போதும் அதற்கு எதிராக சிங்கள மக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடாத்திய போதும் அதில் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பிலுள்ளவர்கள் கலந்து கொண்டு தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்தனர்.
சந்திரிக்காவின் தீர்வுத் திட்டத்தில் என்ன குறைகண்டார்கள்?.. அது குறையென்றால் அதைவிட நிறைவாக எந்த தீர்வை தமிழ் மக்களுக்கு பெற்றுத்தந்தார்கள்?. ஆகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு உரிமை குறித்து உணர்ச்சி பொங்க பேசுவது எதற்காக? நாடாளுமன்ற சிறப்புரிமைகளை பெற்று வெளியே வீரம் பேசி அரசின் பின்கதவு தட்டி குனிக்குறுகி, குனிந்து வளைந்து நின்று அரசுடன் கைகுலுக்கி தமது சொந்த சலுகைகளைப் பெறுவதற்காகவே.....
2002 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்ற 22 நாடாளுமன்ற உறுப்புரிமையும் புலிகள் போட்ட பிச்சை. புலிகளின் அழிவுக்குப் பின்னர் 2010 இல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு புலிகளின் தலைவர் பிரபாகரனால் சிபார்சு செய்யப்பட்ட வேட்பாளர்கள் அனைவரும் நீக்கப்பட்டார்கள். இது தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுடன் சந்தித்து அவருக்கு கொடுத்த வாக்குறுதிக்கு அமையவே நடந்தது.
ஆகவே, தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் புலிகளுக்கும் நண்பர்களல்ல, தமிழ் பேசும் மக்களுக்கும் நண்பர்களல்ல அவர்கள் தங்களது பதவிநாற்காலிகளுக்காகவே அரசியல் நடத்துகின்றனர்.
ஒருஉள்ளூராட்சி சபையைக்கூட நடத்துவதற்கு வக்கற்றவர்கள் மாகாணசபையை எவ்வாறு நடத்துவார்கள். இந்தக் கேள்வியே மக்கள் மத்தியில் எழுந்திருக்கின்றது. மகாணசபை என்பது அனைத்து இயக்கங்களும் போராடி பெற்ற வெற்றி, வேட்டி கூட கசங்காதவர்கள் இதற்கு உரிமை கோர முடியாது. மக்கள் தீர்ப்புக்காக நாங்கள் காத்திருக்கின்றோம் நல்ல செய்தி நாளை அரங்கேறும்.

