வடமாகாண சபையின் ஈ.பி.டி.பியின் மாபெரும் பிரசாரக் கூட்டம் வலிகாமம் பிரதேசத்தில் சிறுப்பிட்டி திடலில் இன்றுமாலை இடம்பெற்றது.
பிரபல ஆசிரியரான குகன் மாஸ்டர் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் தலைமையுரையாற்றிய அவர் யுத்தகாலத்தில் உணவுக்கப்பல் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டு முழு யாழ். குடாநாடுமே பட்டினிச்சாவை எதிர்நோக்கியபோது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே இரவுபகலாக மக்களோடு மக்களாக நின்று உணவுக்கப்பல்களை தருவித்து மக்களைக் காப்பாற்றினார் எனத்தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதன்மை வேட்பாளர் சி. தவராசா ஏனைய மாகாணங்களைப் போல் நமது வடக்கு மாகாணமும், சகல வழிகளிலும் அபிவிருத்தியுடன் கூடிய அதிகாரங்களுடன் முன்னேற்றமடைய வேண்டும். அர்த்தமற்ற உணர்ச்சியூட்டல்களால் நாம் மீண்டும் ஒரு இருண்ட யுகத்துக்கு பயணிக்க முடியாது எனத் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
தமிழ் மக்களாகிய நாம், வன்முறை விரும்பிகளோ, பகைமை பாராட்டுகின்றவர்களோ இல்லை. வெற்றிலைச் சின்னம் எந்தவொரு சிங்களக் கட்சிக்கும் சொந்தமானதல்ல. அது சிங்கள, தமிழ், முஸ்லிம் கட்சிகள் பலவற்றின் கூட்டணிக் கட்சி ஒன்றின் சின்னமாகும். வடக்கு வாழ் தமிழ் மக்களின் கட்சியாக அதில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியே உள்ளது.
நாம் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவது இணக்க அரசியல் என்பதற்காக மட்டுமல்ல, தமிழர்களாகிய நாம் ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து இனங்களுடனும் நல்லிணக்கமாக வாழ விரும்புகின்ற விருப்பத்தை செயல் திட்டமாக்குவதற்காகவேயாகும்.
எனவே எமது மக்கள், நல்லிணக்கத்துக்கான சமிக்ஞைக்காகவும், அபிவிருத்தியுடன் கூடிய உரிமைக்கான அரசியல் முன்னெடுப்புகளுக்காகவும் வெற்றிலைச் சின்னத்தை ஆதரித்து அதற்கே வாக்களிக்க வேண்டும் என்;று கேட்டுக் கொள்கின்றேன்.
தமிழ் மக்களின் தனித்துவமும், உரிமையும் சிங்கள மக்களுக்கோ, நாட்டின் இறைமைக்கோ எதிரானதல்ல என்பதை நாம் வலியுறுத்தி வருகின்றோம். எமது முயற்சிகள் பெரும்பான்மை இனவாதிகளை தூண்டி விடுவதாகவோ அதன் விளைவாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் மழுங்கடிக்கப்படுவதற்கு காரணியாக நாம் ஒருபோதும் இருந்ததுமில்லை, இருக்கப்போவதுமில்லை.
எமது அரசியல் அணுகுமுறைகள் தமிழ் மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதற்காகவும், எமது தாய் மண்ணை அழிவுகளிலிருந்து மீளக்கட்டி எழுப்பி மேம்படுத்துவதாகவும் கௌரவமானதும் நிரந்தரமானதுமான அரசியல் உரிமையை நோக்கியதாகவுமே எப்போதும் இருந்துள்ளது என்பதை மக்களாகிய நீங்கள் அறிவீர்கள்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் எப்பொழுதும் மக்களுக்கு சேவை செய்வதற்காகவும், உதவுவதற்குமாகவுமே மக்களிடம் சென்றோமே தவிர, வன்முறையை தூண்டி விடுவதற்கும் அவர்களை அழிவுப் பாதைக்குள் தள்ளிவிடுவதற்காகவும் அல்ல என்பதை நீங்கள் புரிந்துக் கொண்டிருப்பீர்கள்.
நாம் மக்களாகிய உங்களிடம் எதைக் கூறுகின்றோமோ, அதைத்தான் தென் இலங்கை அரசிடமும், சிங்கள மக்களிடமும் கூறுகின்றோம். அவர்களிடம் எதைப் பேசுகின்றோமோ அதைத்தான் எமது தமிழ் மக்களிடமும் கூறுகின்றோம்.
நாம் சுய இலாபங்களுக்காகவோ தேர்தலுக்காகவோ முரண்பாடாக எதையும் பேசுவதில்லை. வாக்குகளுக்காக விளைவுகளையிட்டு சிந்திக்காமல் உங்களை உணர்ச்சியூட்டும் விதமாகப் பேசுவதற்கு நாம் தேர்தலுக்குப் பின்னர் உங்களைவிட்டு ஓடிவிடும் அரசியல்வாதிகள் இல்லை.
நாம் உங்கள் மத்தியில், உங்களுடனேயே வாழ்பவர்கள். எனவே நாம் உண்மையே உங்களுடன் பேச முடியும், உண்மையாகவே செயற்பட முடியும். எமது மக்கள் உண்மையானவர்களை தெரிவு செய்ய வேண்டுமாக இருந்தால் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து வெற்றிலைச் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
காலத்துக்குக் காலம், கோசங்களையும் கொள்கைகளையும் மாற்றிக் கொள்ளும் நபர்களுக்கும் கட்சிகளுக்கும் வாக்களித்து அவர்களை வெற்றிபெறச் செய்து, தமிழ் மக்கள் தோற்றுப்போகும் வரலாற்றை இந்தத் தேர்தலில் மாற்றியமைப்போம் எனத் தெரிவித்தார்.
இங்கு சிறப்புரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், இடம்பெறவுள்ள மாகாணசபைத் தேர்தலானது ஓர் பொன்னான வாய்ப்பு என்பதுடன் எமது கைகளில் ஆட்சியானது வரும் பட்சத்தில் மூன்று முதல் ஐந்து வருட காலத்தில் எமது தாயகத்தை வளம் கொழிக்கும் பிரதேசமாக மாற்ற முடியும் எனத்தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரும் யாழ். மாவட்ட ஈ.பி.டி.பி அமைப்பாளருமான கந்தசாமி கமலேந்திரன், ஈபிடிபியின் கோப்பாய் பிரதேச இணைப்பாளர் ஐங்கரன், அச்சுவேலி பிரதேச இணைப்பாளர் தருமராசா பிரதேச பொது அமைப்பு பிரதிநிதிகள் உட்பட பெருமளவு பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

