இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்றிருந்தால் நடைமுறையிலேயே நாம் சுயநிர்ணய உரிமையை பெற்றிருக்க முடியும். ஆனால் அதை ஏற்றுக் கொள்ளாத பட்சத்திலேயே எமது மக்கள் சொந்த இருப்பிடங்களையும் விட்டு வெளியேறி எதிலிகளாக வாழ வேண்டிய துர்ப்பாக்கியத்திற்கு ஆளாகினர் என்று ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
கோப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட வளலாய் சிறி சித்திவிநாயகர் ஆலய முன்றலில் இன்றைய தினம் (17) இடம்பெற்ற அப்பகுதி மக்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தவறான வழிநடத்தல்கள் காரணமாகவே கடந்தகாலங்களில் எமது மக்கள் அளவிடமுடியாத துன்பதுயரங்களுக்கு உள்ளாகியிருந்தனர். இந்தநிலையில் எதிர்காலத்திலும் இவ்வாறான நிலைமைகள் ஏற்படாது பார்த்துக் கொள்ள வேண்டும்.
அந்தவகையில் தான் இருக்கின்ற நிலைமைகளை பார்த்துக் கொண்டு முன்னேற்றம் காண வேண்டும். நடைமுறைச்சாத்தியமான வழிமுறையில் எமது மக்களுக்கான இலக்கினை வென்றெடுப்பதே எமது நோக்கமாகும்.
எமது மக்களுடைய கௌரவத்தைப் பாதுகாக்கவே நாம் இணக்க அரசியலை தேர்வு செய்துள்ளோம். அதனூடாக பலவேறுபட்ட அபிவிருத்தி செயற்திட்டங்களையும் முன்னெடுக்க முடிந்துள்ளது.
அத்துடன் எமது அரசியல் நிலைப்பாட்டுக்கூடாகவே படைத்தரப்பினரிடமுள்ள காணிகளை மக்களுக்கு பகுதி பகுதியாக கையளிக்க முடிகின்றது என்றும், இந்நிலையில் தான் நாம் வெற்றிலைச் சின்னத்தில் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுகின்றோமே தவிர வேறெந்த சுயலாபங்களுக்காக அல்லவென்றும் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் 1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றிருந்தால் அப்போதே சுயநிர்ணய உரிமையை பெற்றுக் கொள்ள முடிந்திருக்குமென்றும் அதை சரியான முறையில் பயன்படுத்தாதன் விளைவே முள்ளிவாய்க்கால்வரையில் எமது மக்கள் அவலங்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும்; தெரிவித்தார்.

